

கோவை: கந்துவட்டி வசூல் புகார் தொடர்பாக 41 இடங்களில் கோவை மாவட்ட காவல்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கந்துவட்டி வசூலித்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக கடன் வாங்கும் வாய்ப்பை பயன்படுத்தி கடன் கொடுக்கும் சிலர் வட்டி, மீட்டர் வட்டி என கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் சில வாரங்களுக்கு முன்னர் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தினர். அதில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், ‘ஆபரேஷன் கந்துவட்டி 2.0’ என்ற பெயரில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: "6 டிஎஸ்பிக்கள் தலைமையில், 20 இன்ஸ்பெக்டர்கள், 80 காவலர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலிப்பு புகார்கள் வந்த 41 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். கந்துவட்டி கும்பலிடம் இருந்து மொத்தம் 127 காசோலைகள், 48 டெபிட் அட்டைகள், 18 வங்கி பாஸ் புத்தகங்கள், 54 கையெழுத்திட்டு எழுதப்பட்ட பத்திரங்கள், 35 நிதி ஆவணங்கள், 211 வாகன பதிவு சான்றிதழ்கள், 79 உறுதிப்பத்திரங்கள், 3 பாஸ்போர்ட், 7 ஆதார் அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1 கோடியே 26 லட்சம் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கந்து வட்டி வசூலித்த 19 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பி.கே.புதூர் பாலு கார்டனைச் சேர்ந்த சண்முகம்(45), தொழில் விரிவாக்கத்துக்காக திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்த நடராஜனிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அசலை திருப்பிச் செலுத்திய பிறகும் கூடுதல் வட்டி கேட்டு நடராஜன் தொல்லைப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிந்து நடராஜனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 500 தொகை, 31 உறுதிப்பத்திரங்கள், 28 காசோலைகள், 4 ஸ்டாம்ப் பத்திரங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்." இவ்வாறு அவர்கள் கூறினர்.