Published : 29 Jul 2022 06:56 AM
Last Updated : 29 Jul 2022 06:56 AM
விழுப்புரம்: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைதான 5 பேரையும் காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஒருநாள் அவகாசம் தந்த நிலையில், சிபிசிஐடி போலீஸார் 12 மணி நேரத்திலேயே விசாரணையை முடித்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கிபடித்து வந்த பிளஸ் 2 மாணவிகடந்த 13-ம் தேதி சந்தேகத்துக்குரிய வகையில் மரணமடைந்தார். அவர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.
தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது.
இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குமாற்றம் செய்யப்பட்டு அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளிச் செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, “கைது செய்யப்பட்டவர்களை ஒரு நாள் காவலில் வைத்து, நேற்று பிற்பகல் 12.30-க்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்'' என்று நடுவர் புஷ்பராணி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அந்த 5 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 24 மணி நேர விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவே விசாரணையை முடித்து, நள்ளிரவே நடுவர் முன்பு ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
முதலில் விசாரணைக்காக 3 நாட்கள், அதாவது 72 மணிநேரம் அனுமதிக்குமாறு கேட்டசிபிசிஐடி போலீஸார், 12 மணி நேரத்துக்குள் விசாரணையை முடித்துக் கொண்டது பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்குள் அழைத்து வரப்பட்ட 5 பேரையும் செய்தியாளர்கள் படமெடுக்க விடாமல் சிபிசிஐடி போலீஸார் கடும் கெடுபிடியுடன் நடந்து கொண்டதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜாமீன் கேட்டு மனு
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன்கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோர் ஒருமனுவாகவும், முதல்வர் சிவசங்கரன் தனியாகவும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகிய இருவரும் தனியாக எனமொத்தம் 3 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
317 பேர் கைது
இதற்கிடையே, பள்ளியில் நடந்தகலவரத்தின்போது காவல் துறையின் வாகனத்தை அடித்து, உடைத்து அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வீடியோ காட்சியின் அடிப்படையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுகிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (22) என்பவரை சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இக்கலவரம் தொடர்பாக இதுவரையில் 317 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பிளஸ் 2 மறுதேர்வு எழுதுவதற்காக ஜாமீன்கேட்டு விண்ணப்பித்த 2 சிறார்கள் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT