Published : 29 Jul 2022 06:52 AM
Last Updated : 29 Jul 2022 06:52 AM
ஈரோடு: சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு வடக்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோயில் வீதியில் வசித்து வருபவர் மகபூப். இவரது மகன் ஆசிப்முசாப்தீன்(28). ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நஞ்சப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யாசின்(31). இவர்கள் இருவருக்கும் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் ஈரோடு போலீஸார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டர்.
இவர்கள் இருவரிடமும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். ஈரோடு ஆர்.என்.புதூரில்காவலர் குடியிருப்பில் உள்ள தனிஇடத்துக்கு, இருவரையும் அழைத்துச் சென்று, இரு நாட்கள், தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில், ஆசிப் முசாப்தீனுக்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது, சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்பு சட்டம் உட்பட 7 சட்டப் பிரிவுகளின்கீழ் ஈரோடு வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, ஆசிப் முசாப்தீனைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஒருவர் விடுவிப்பு
யாசின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பெங்களூரு மற்றும் சேலத்தில் தீவிரவாத தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. இந்தஇரு சம்பவங்களுக்கும், ஈரோடுஇளைஞர் கைது செய்யப்பட்டதற்கும் தொடர்பில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக இருவரை பிடித்து, 2 நாட்கள் காவல்துறை விசாரித்த நிலையில், கைதுதொடர்பான தகவலை உயர் அதிகாரிகள் மூலமோ, செய்திக்குறிப்பு மூலமோ ஈரோடு காவல்துறை தெரிவிக்கவில்லை. இதனால், ஊடகங்களில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகி தேவையற்ற பரபரப்பு ஏற்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT