Published : 28 Jul 2022 07:27 AM
Last Updated : 28 Jul 2022 07:27 AM

வரி ஏய்ப்பு செய்ததாக கூறி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுநர் கைது

சென்னை: வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறிரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியவணிகவரித் துறை அதிகாரியின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொளத்தூர், ஐயா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் நேரு (48). இவர், அதே பகுதியில் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்து மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் நேருவை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் வணிவரித் துறையிலிருந்து பேசுவதாகவும், தங்களது நிறுவனம் ரூ.4 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், ரூ.25 லட்சம் தரும்படியும் கேட்டு மிரட்டியுள்ளார். கொடுக்க மறுத்தால் கைது நடவடிக்கை பாயும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற நடவடிக்கையைத் தவிர்க்க பாண்டி பஜார் பகுதியில் தன்னை நேரில் சந்திக்க வருமாறு கூறியுள்ளார். அந்த நபர் கூறியபடி கடந்த 25-ம் தேதி நேரு சென்றுள்ளார்.

அப்போது, அவரது நடவடிக்கைககளில் சந்தேகமடைந்த நேரு உடனே இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து பாண்டி பஜார் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்துள்ளனர். பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் தி.நகர், லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேலு (46) என்பதும், இவர் வணிகவரித் துறை அதிகாரி ஒருவரின் கார் ஓட்டுநராக பணி செய்து வந்ததும் தெரியவந்தது.

அவர், நேருவிடம் பணம் பறிக்கதிட்டமிட்டு மிரட்டியது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து வேலுவை கைது செய்தபோலீஸார் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ரூ.25 லட்சம் கொடுக்க ஒப்புக் கொண்ட நேரு எதற்காக அவ்வளவுபணம் கொடுக்க முன் வந்தார்?, ஏதேனும் சட்ட விரோத செயலில் ஈடுபடுகிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x