உதகை | கஞ்சா விற்ற போலீஸ்காரர் கைது: தகவலை மறைத்த 2 காவலர் இடைநீக்கம்

கைதான காவலர் அமரன்
கைதான காவலர் அமரன்
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேகடந்த வாரம் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சரத்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் அமரன் என்ற காவலர் கஞ்சாவைக் கொடுத்து விற்கச் சொன்னதாக கூறினார்.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின்பேரில், தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், 4 போலீஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தேனி காவல் நிலையத்தில் கணேசன் என்பவர் காவலராக பணிபுரிந்து வந்தார். கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில்இருந்ததால் இடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கூடலூர் எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது நண்பரான காவலர் அமரனை தேடி கணேசன் வந்தார்.

அங்கு இருந்தபடியே கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி அமரனிடம் விற்க கொடுத்துள்ளார். அமரன்(24), கஞ்சா வியாபாரி சரத்குமாரிடம் அதை கொடுத்து உதகையில் கஞ்சா விற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, சரத்குமாரும், காவலர் அமரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமரன் கஞ்சா விற்பது பி1 காவல் நிலையத்தில் பணிபுரியும் விவேக் என்ற காவலருக்கும், சேரம்பாடி ஆய்வாளரின் ஓட்டுநராக பணிபுரியும் உடையார் என்பவருக்கும் தெரிந்தும், உயர் அதிகாரிகளுக்கு சொல்லாமல் மறைத்ததால், இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர் பணியில் இருந்து நீக்கப்பட்ட கணேசனை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in