

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளாங்குளம் கிராம உதவியாளராக, அதே ஊரைச் சேர்ந்த சின்னையா மகன் பூமிநாதன்(29) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அப்பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரில் மணல் அள்ளுவது குறித்து வருவாய்த் துறைக்குத் தகவல் அளித்து, மணல் திருட்டை நடைபெறாமல் தடுத்து வந்தார்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு செப்.9-ம்தேதி இரவு பட்டங்காடு கிராமத்தில் ஒருமுள்புதரில் படுகாயங்களுடன் பூமிநாதன் கிடந்தார். தகவல் அறிந்த சின்னையா அங்குச் சென்று படுகாயத்துடன் கிடந்த தனது மகனை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மறுநாள் (செப்.10) பூமிநாதன் இறந்தார்.
இதுகுறித்து பேராவூரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, காட்டாற்றில் மணல் திருடுவதை தடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பட்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்த வீ.சீனிவாசன்(35) உள்ளிட்டோர் பூமிநாதனை கட்டை, கம்பால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சீனிவாசன், அவரது சகோதரி க.அல்லிராணி(42) மற்றும் ப.அண்ணாமலை(30), ப.சந்திரபோஸ்(32), கா.அய்யப்பன்(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்குதஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல்நீதிமன்றத்தில் (குடியுரிமை பாதுகாப்பு) நடைபெற்று வந்தது. இதில், அரசு தரப்பு சாட்சியாக 15 பேர் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசன், அல்லிராணி உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.