

தென் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் சிக்கிய ஆயிரம் பேரிடம் பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதை மீறி மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரும்பாலும், நன்னடத்தை பிணையப் பத்திரம் ரவுடி, சந்தேக நபர்களிடம் மட்டும் பெறப்படும். இச்சட்டம் கஞ்சா குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில், தென்மாவட்டங்களில் ஏற்கெனவே கஞ்சா, போதைப் பொருள் விற்ற பழைய குற்றவாளிகள் சுமார் 1000 பேரிடம் பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.
மதுரையில் -142 பேர், விருதுநகர்-81, திண்டுக்கல் -186, தேனி-271, ராமநாதபுரம்-87, சிவகங்கை -30, நெல்லை-43, தென்காசி-32, தூத்துக்குடி-104, கன்னியாகுமரி-24 நபர்களும் அடங்குவர்.
இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். பிணையப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள காலகட்டத்துக்குள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்டால், விதியை மீறியதாக அவர்கள் கைது செய்யப்படுவர். டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரது வழிகாட்டுதலின்படி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.