

கோவை: கோவை மாவட்டம் கெம்பனூரில் உள்ள அட்டுக்கல் ஆதிவாசி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது. தனியார் அமைப்பினர், கடந்த 2 நாட்களாக கோவையின் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த ஆதரவற்றவர்களை மீட்டு இங்கு அழைத்து வந்து தங்க வைத்தனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில் இக்காப்பகத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. தகவலறிந்த பேரூர் வட்டாட்சியர் இந்துமதி, எஸ்.பி. பத்ரி நாராயணன் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
காப்பகத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த ஜூபின் பேபி (44) உள்ளிட்டோரிடம் விசாரித்தனர். ஆதரவற்றவர்களை மீட்டு ஒருங்கிணைத்து, மாநிலம் முழுவதும் காப்பகங்களுக்கு அனுப்பி மறுவாழ்வு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தங்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி இங்கு அழைத்து வந்ததாகவும், மொட்டை அடித்து, தாக்குவதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் ஆதரவற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் இந்துமதி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜூபின் பேபி(44), பி.என்.புதூரைச் சேர்ந்த செந்தில்குமார்(44), சென்னையைச் சேர்ந்த செல்வின்(49), அருண் (36), தருமபுரி பாலச்சந்திரன் (46), சத்தியமங்கலம் ஜார்ஜ் ஆகியோர் மீது தகாத வார்த்தைகளில் பேசுதல், சிறைைவத்தல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.