

சேலம்: சேலத்தில் பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சூரமங்கலம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) பேராசிரியர் கோபி (45). இவர் கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராகப் பதவி வகித்து வருகிறார். பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பதிவாளர் கோபி வசித்து வருகிறார். இவர் வேதியியல் துறை பேராசிரியராக உள்ள நிலையில், மூன்று மாணவிகளுக்கு நெறியாளராக இருந்து வருகிறார்.
சேலத்தைச் சேர்ந்த பிஎச்டி பயிலும் மாணவிக்கு நெறியாளராக இருந்துள்ளார். பதிவாளர் கோபி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆய்வறிக்கை சரிபார்க்க வேண்டி, தான் தங்கியுள்ள பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்புக்கு அந்த பிஎச்டி மாணவியை அழைத்துள்ளார்.
இதையடுத்து மாணவி தனது உறவினர்களுடன் பதிவாளர் கோபி தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சென்றுள்ளார். அப்போது, உறவினர்கள் விடுதிக்கு வெளியே காத்திருந்த நிலையில், பதிவாளர் கோபியை குடியிருப்புக்குள் தனியாக சென்று மாணவி சந்தித்துள்ளார்.
குடியிருப்பில் இருந்து அழுகையுடன் வெளியேறிய மாணவி, வெளியில் காத்திருந்த உறவினர்களிடம், பதிவாளர் கோபி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த உறவினர்கள், பதிவாளர் கோபியைத் தாக்கிவிட்டு, மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியான பதிவாளர் கோபி, தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டதாக கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல, கருப்பூர் காவல் நிலையத்தில் பதிவாளர் கோபி மீது பாலியல் தொல்லை கொடுத்தாக பிஎச்டி மாணவி புகார் அளித்தார்.
இந்நிலையில், பிஎச்டி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாளர் கோபியை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.