

புதுடெல்லி: மாநிலங்களுக்கு இடையே 7 லட்சம் எண்ணிக்கையால் ஆன போதை மாத்திரை, மருந்துகள், ஊசிகளை கடத்தியதாக ஒருவரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரகசியத் தகவலின் பேரில் உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டவிரோத கிடங்கில் நேற்று முன்தினம் பஞ்சாப் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 7 லட்சம் போதை மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், ஊசிகள், ஒப்பியாட்ஸ் எனப்படும் போதைப்பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இந்த மருந்துகளை விநியோகம் செய்த சஹாரன்பூர் மாவட்டம் கலாசிலைன் பகுதியைச் சேர்ந்த ஆசிஷ் விஷ்கர்மா என்பவரைக் கைது செய்தனர்.
இவர் உ.பி.யிலிருந்து பஞ்சாபின் லூதியாணா, பாட்டியாலா, ரூப்நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு போதை மாத்திரைகளை கடந்த 5 ஆண்டுகளாக விநியோகம் செய்து வந்துள்ளார். தற்போது பறிமுதல் செய்த போதை மருந்துகளையும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தி விற்க இவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது என பஞ்சாப் போலீஸ் டிஜிபி கவுரவ்யாதவ் தெரிவித்தார்.
கிடங்கில் இருந்த 7 லட்சம் போதை மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், 16,725 போதை ஊசிகள் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மருந்து, மாத்திரைகள் என்ற பெயரில் போதையூட்டும் வேதிப்பொருட்களைச் சேர்த்து இந்த மாத்திரைகளை தயாரித்து இவர் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.