

கோவை அருகே விவசாயியிடம் ரூ.1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள கோமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரேமானந்த்.விவசாயி. இவர், பொள்ளாச்சி, கோமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய்களை வாங்கி, அதை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவையைச் சேர்ந்த சிவக்குமார், நாராயணசாமி, ராதாகிருஷ் ணன், மனோஜ்குமார், சக்திவடிவேலு, வேணுகோபால் ஆகியோர் கொப்பரை தேங்காய் வாங்கும் இடைத்தரகர்களாக இருந்தனர்.
இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரேமானந்த் புகார் மனு அளித்தார். அதில், ‘கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 12 லோடுகள் கொப்பரைத் தேங்காய்களை இடைத்தரகர்கள் மூலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு ரூ.2 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்தேன். இதில் ரூ.72 லட்சத்தை மட்டும் இடைத்தரகர்கள் கொடுத்தனர். மீதமுள்ள ரூ.1 கோடியே 46 லட்சத்து 11 ஆயிரத்து 480-ஐ தராமல் மோசடி செய்துவிட்டனர்.
இதற்கு உடந்தையாக இருந்த ஐதராபாத் வியாபாரி பஜ்ரங்லால் (43) மற்றும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து, வியாபாரி பங்கஜ்லாலை நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.