

இளம்பெண் கொலை வழக்கில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த நபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பார்குட்டையைச் சேர்ந்தஇளம்பெண் சின்னப்பொண்ணு கடந்த 2010-ம் ஆண்டு செப்.20 அன்று அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்தியவிசாரணையில், அதே ஊரைச் சேர்ந்தசிவா என்பவர் சின்னப்பொண்ணுவுடன்2 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாகவும், சிவாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர் என்றும், சின்னப்பொண்ணுவின் வீட்டை தனது மகள்களின் பெயருக்கு எழுதி வைக்காத ஆத்திரத்தில் சிவா, சின்னப் பொண்ணுவை அடித்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் சிவாவை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் விரைவு நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு சிவாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிவா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.ஆர்.ரவி ஆஜராகி வாதிடுகையில், ‘‘ கொலை சம்பவத்தை நேரில் பார்த்த 3 சாட்சிகளும், பிற முக்கிய சாட்சிகள் 5 பேரும் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். சம்பவம் நடந்து 16 நாட்கள் கழித்து குற்றவியல் நடுவர் முன்பாக அளிக்கப்பட்ட சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது’’ என வாதிடப்பட்டது.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் வாதிடுகையில், ‘‘போலீஸ் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர் என்பதற்காக கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவரை விடுதலை செய்துவிட முடியாது. மனுதாரரான சிவா அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் பிற மருத்துவ சாட்சிகளை கவனத்தில் கொண்டே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதி்ட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பி்த்துள்ள உத்தரவில், ‘‘கொலை வழக்கின் முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். மருத்துவ அறிக்கையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சிவாவின் சட்டையில் இருந்த ரத்தமும், கொலையுண்ட சி்ன்னப்பொண்ணுவின் ரத்தமும் ‘பி’ குரூப் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது பி-பாசிட்டிவ் வகையா அல்லது பி-நெகட்டிவ் வகையா என தெரிவிக்கப்படவில்லை. புகார் கொடுத்தவரே பிறழ் சாட்சியாகியுள்ளார்.
இந்த குற்றத்தை நிரூபிக்க காவல் துறை தரப்பில் பொதுசாட்சியங்கள் எதுவும் இல்லை. குற்றத்தை சரியாக நிரூபிக்க காவல் துறை உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை. சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொலை செப்.20 அன்று நடந்துள்ளது. மறுநாள் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் சாட்சிகள் அக்.6-ம் தேதிதான் குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இந்த தாமதம் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரருக்கு சாதகமாக உள்ளது.
குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளின் வாக்குமூலம் மட்டும் போதாது என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது’’ எனக்கூறி விடுதலை செய்து உத்தர விட்டுள்ளனர்.