புதுச்சேரி | கொட்டும் மழையில் வீட்டுக்குள் புகுந்து வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி ரவுடி கொலை: கூட்டாளிகள் 3 பேர் காயம்

கொலை நடந்த இடத்தில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர். 
உள்டம்: கொலையுண்ட பன்னீர் செல்வம்.
கொலை நடந்த இடத்தில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர். உள்டம்: கொலையுண்ட பன்னீர் செல்வம்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் கொட்டும் மழையில் வீட்டுக்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (22). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் பாலாஜி (எ) பாலகிருஷ்ணன் (21), சத்தியவாசகன், பட்சி (எ) தினேஷ்குமார் உள்ளிட்ட 8 பேருடன் தனது வீட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தது. இதை பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த ஜான்டி (எ) செந்தில்நாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்தது. அவர்களை பார்த்ததும் பன்னீர்செல்வம் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது சரமாரியாக வீசியது. அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அந்த பகுதி புகை மண்டலமானது.

இதில் பன்னீர்செல்வம், அவரது கூட்டாளிகள் பாலகிருஷ்ணன் (21), சத்தியவாசகன், தினேஷ்குமார் ஆகியோர் சிக்கிக்கொண்ட நிலையில் மற்ற 4 பேர் தப்பியோடினர். இதையடுத்து அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பன்னீர்செல்வம், சத்தியவாசகன் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சத்தியவாசகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் எஸ்பி பக்தவச்சலம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை தொடர்பாக டி.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், யார் பெரியவர் என்பதில் மோதல் ஏற்பட்டு, கொலை நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பன்னீர்செல்வம் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து ஜிப்மர் மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in