Published : 22 Jul 2022 07:56 AM
Last Updated : 22 Jul 2022 07:56 AM

தென்காசி | கிணற்றில் விழுந்த மாணவர் உயிரிழப்பு; தலைமைக் காவலர் கைது: 20 பேர் மீது கொலை வழக்கு பதிவு

தென்காசி: சங்கரன்கோவில் அருகே இருதரப்பினர் மோதலின்போது கிணற்றில் விழுந்து கல்லூரி மாணவர் உயிர்இழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 20 பேர் தேடப்படுகிறார்கள்.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரதீப் (20). மேலநீலிதநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் நடைபெற்ற கோயில் கொடை விழாவுக்கு பிரதீப் தனது நண்பர்களுடன் சென்றார். அங்கு கரகாட்ட நிகழ்ச்சியில் இவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து பிரதீப் தப்பித்து ஓடியபோது அங்குள்ள கிணற்றில் விழுந்து இறந்து போனார்.

மர்ம மரணம் என்று சின்னகோயிலாங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், பிரதீப்பின் மரணத்துக்கு நீதி வேண்டும். உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுரண்டை காவல் நிலைய ஏட்டு தேவராஜ் (49) கைது செய்யப்பட்டார். மேலும் 20 பேர் தேடப்படுகிறார்கள். இதையொட்டி குருக்கள்பட்டி, வல்லராமபுரம் ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x