

சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.8.86 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்த தான்சானியா நாட்டு பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் பெருமளவில் போதைப் பொருட்கள் கடத்திவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்கிடைத்து. இதையடுத்து அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்தனர்.
அப்போது துபாய் விமானத்தில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பாட்ரிக் (28) என்பவர் வந்தார். அவரது நடவடிக்கை சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது உகாண்டாவில் இருந்து துபாய் வழியாக சுற்றுலாப் பயணியாக வந்ததாக தெரிவித்தார். மேலும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அவருடைய உடைமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராததால்,அந்தப் பயணியை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் பல மாத்திரைகள் (கேப்சூல்) இருப்பது தெரியவந்தது.
எனவே ஜோசப் பாட்ரிக்கை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு 'இனிமா' கொடுத்து, வயிற்றில் உள்ள மாத்திரைகளை கொஞ்சம்கொஞ்சமாக வெளியேற்றினர். அப்படி ஜோசப் பேட்ரிக் வயிற்றிலிருந்து மொத்தம் 86 கேப்சூல்கள் வெளியே வந்தன.
அவர் விழுங்கி வந்திருந்த கேப்சூல்களை, சுங்க அதிகாரிகள் உடைத்து பார்த்தபோது, அவற்றில் ஹெராயின் வகை போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். 86 கேப்சூல்களிலும் மொத்தம் 1 கிலோ 256 கிராம்ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.8.86 கோடி.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் ஜோசப் பாட்ரிக்கை கைதுசெய்தனர். அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா? அவரிடம் போதைப் பொருட்களை கொடுத்து அனுப்பியது யார்? யாருக்காக கடத்தி வந்தார்? என்பது குறித்துவிசாரணை நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா நடித்த 'அயன்' திரைப்பட பாணியில் வயிற்றில் வைத்து போதைப் பொருட்களை கடத்தி வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.