

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சேதுபதி நகரைச் சேர்ந்தவர் நவீன்(28). குளிர் சாதனங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
திருமண தகவல் மையத்தில் எனது பதிவை பார்த்து, நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சூசன் என்ற பெண் என்னைத் தொடர்பு கொண்டு திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். மருத்துவராக வேலை செய்து வருவதாகவும், திருமணத்துக்கு பின்னர் சொந்த ஊரிலேயே குடியேறப் போவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நாங்கள் வாட்ஸ் அப் மூலம் பேசி வந்தோம். சில தினங்களுக்கு முன்னர் சூசன் தனது சகோதரருடன் டெல்லிக்கு வருவதாக தெரிவித்தார்.
சில நாட்கள் கழித்து, டெல்லி விமானநிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி என கூறிக்கொண்டு என்னிடம் செல்போனில் பேசிய நபர், “சூசன், அவரது சகோதரர் நெதர்லாந்து நாட்டில் இருந்து ஒரு லட்சம் யூரோக்களை எடுத்து வந்துள்ளனர்.
அதன் இந்திய மதிப்பு ரூ.85 லட்சம். இதற்கு வரியாக ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் செலுத்த வேண்டும்” என்றார். இதை நம்பிய நான் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் தொகையை செலுத்தினேன். அதன் பின்னர் சூசனின் செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
மோசடி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.