போலீஸில் புகார் அளித்தும் பலனில்லை; கணவனை இழந்த பெண்ணை நடுத்தெருவில் தாக்கிய உறவினர்: வலைதளங்களில் வைரலான வீடியோ

காவேரி
காவேரி
Updated on
1 min read

விருத்தாசலம்/கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி காவேரி. 5 மாதங்களுக்கு முன்புஉடல் நலிவுற்று முருகன் இறந்த நிலையில், காவேரி, தனது 2 குழந்தைகளுடன் நாவலூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

அதே கிராமத்தில் வசித்து வரும் முருகனின் சகோதரி குடும்பத்தாரிடம், முருகன் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவேரிக்கும், முருகனின் சகோதரி குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதுகுறித்து எஸ்பி, டிஐஜி அலுவலகங்களில் காவேரி புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லததால், கடந்த மாதம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து ஆவினன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே நேற்று காலை காவேரி தன் வீட்டின் வாசலில் நின்றிருந்தபோது, அங்கு வந்த முருகனின் சகோதரி கணவர் திருமுருகன், காவேரியை கட்டைகளைக் கொண்டு தாக்கியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் உள்ளார். இதை அங்கு தெருவில் இருந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர். சிலர் திருமுருகனை தடுக்க முயன்றனர்.

அவர்களையும் திருமுருகன் வெட்ட முயற்சிக்கும் காட்சி பதிவாகி, வலைதளங்களில் வைரலானது. காவேரியை அங்கிருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கணவனை இழந்து தனியாக வசிக்கும் ஒரு பெண், டிஐஜி அலுவலகம் வரையிலும் சென்று புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லாததும், சம்பந்தப்பட்ட நபர் அப்பெண்ணை தாக்கியதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in