

செங்கல்பட்டு: மேல்மருவத்தூரைச் சேர்ந்தவர் சக்தி நாதன். பட்டதாரியான இவர் வேலைக்காக இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அவரை தொடர்புகொண்ட சிலர் போலந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான பணிநியமன ஆணையை மின்அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளனர். இதனை நம்பிய அவர் சுமார் ரூ.7 லட்சத்தை அந்த மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.பொன்ராமு தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த நவீன் குமார் மற்றும் குரூப் சந்து ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.