Published : 19 Jul 2022 08:14 AM
Last Updated : 19 Jul 2022 08:14 AM
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கடப்பாக்கத்தை அடுத்த விளம்பூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மனைவி தேவகி (50). இவர் நேற்று காலை வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக வீட்டு அருகே உள்ள கொட்டகையில் தீவனம் எடுப்பதற்காக சென்று உள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பெண்மணியின் கை, கால்களை கட்டி தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகை பறித்து கொண்டு உடலை சாக்கு பையில் கட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த செம்பூண்டி பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், மற்றொருவர் காயமடைந்து இருப்பதாகவும் மேல்மருவத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ்
மேல்மருவத்தூர் போலீஸார், விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் மேலவளம்பேட்டையைச் சேர்ந்த அய்யனார் என்பதும், காயம் அடைந்தவர் வீரமுத்து என்பதும் தெரியவந்தது.
இந்தப் பகுதிக்குள் ஏன் வந்தார்கள் என காயம் அடைந்த நபர் வீரமுத்து போலீஸாரிடம் கூறும்போது, உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ருத்ரா என்ற ருத்ரகுமாரை இப்பகுதிக்கு வரவைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், ருத்ரகுமார் மீது செங்கல்பட்டு சாலவாக்கம் உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிபறி, கொலை, கொள்ளை, உள்ளிட்ட வழக்கு இருப்பதாக தெரியவந்தது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT