

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 126 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்தோர் மீது பாதிக்கப்பட்டோர் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, ராஜபாளையம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் ஆஸ்திரேலியா நாட்டில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகக் கூறி, விளம்பரம் செய்தனர்.
இதுதொடர்பாக சிவகங்கை, விருது நகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த 126 பேரிடம் தலா ரூ.47,500 வாங்கியுள்ளனர். மேலும் அவர் களிடம், மதுரையில் இருந்து பேருந்து மூலம் ஹைதராபாத் சென்று, அங்கிருந்து விமானத்தில் ஆஸ்திரேலியா செல்லலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்காக பணம் கொடுத்த அனை வரையும் நேற்று முன்தினம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு சென்ற 126 பேரும் தங்களை அழைத்துச் செல்வார்கள் என நம்பி பேருந்து நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருந்தனர். நான்கு பேரும் வராத நிலையில், அவர்களது மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்.
4 பேரின் மொபைல்போன்களும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தன. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 126 பேரும் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவரிடம் இருந்து பாதிக்கப் பட்டோரின் பாஸ்போர்ட்களையும் பறி முதல் செய்தனர்.