

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபிலேன் பகுதியைச் சேர்ந்தவர் மீனா சாக்கிரியா(54). அங்குள்ள ஜெயின் கோயில் உறுப்பினர்.
கடந்த 13-ம் தேதி தங்கத்திலான தட்டு, விசிறி, ஊதுபத்தி ஸ்டாண்ட், குவளையை கோயிலுக்கு எடுத்துச் சென்றார். பூஜை முடிந்த பின்னர், கோயில் வளாகத்தில் பையை வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோது, பை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரித்ததில், கோயில் பூசாரியான, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விஜய்ராவல்(37), நண்பர் மகேந்திரனுடன் சேர்ந்து, தங்கத்தாலான பூஜை உபகரணங்கள் அடங்கிய பையைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, விஜய்ராவலைக் கைது செய்த போலீஸார், 46 பவுன் எடையிலான தங்க பூஜை உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேந்திரனைத் தேடிவருகின்றனர்.