Published : 18 Jul 2022 04:15 AM
Last Updated : 18 Jul 2022 04:15 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி பூவரசி(22). திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
பெங்களூருவில் தங்கி ஐடி துறையில் பணியாற்றும் ஜெயக்குமார், கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சொந்த கிராமத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு பூவரசி நேற்று முன் தினம் இரவு தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில், பூவரசி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், கலசப்பாக்கம் காவல்நிலையம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வரதட்சணை கொடுமையால் பூவரசி தற்கொலை செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டினர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT