

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை கள்ளக்குறிச்சி மாவட்டப் போலீஸார் சாதூர்யமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கவுரி - லோகநாதன் தம்பதியரின் மகன் தருண்(4). இவர் கடந்த 7-ம் தேதி நள்ளிரவு திடீரென மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரது தாயார் கவுரி, கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பெயரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் சிறுவன் மாயமானது தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்தும், சந்தேக நபர்களின் தொலைபேசி எண்களை வைத்தும் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில், நேற்றும் குழந்தையின் பெற்றோருக்கு மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தை உயிருடன் வேண்டுமென்றால் ரூ.1 கோடி ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு தகவல் தந்தால் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என்று கூறிவிட்டு போனை துண்டித்துக் கொண்டனர்.
இந்தநிலையில் இன்று காலை பங்காரம் கிராம பகுதியில் குற்றவாளியின் நடமாட்டம் இருப்பதை மிரட்டல் விடுத்த மர்ம நபரின் தொலைபேசி எண் மூலம் போலீஸார் உறுதி செய்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கடத்தப்பட்ட சிறுவன் இருப்பதை உறுதி செய்து பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட சுந்தர சோழன்,ஈஸ்டர் ஜாய் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ரகுபதி,அருள் ஆகியோரையும் தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.