Published : 16 Jul 2022 06:00 AM
Last Updated : 16 Jul 2022 06:00 AM

தண்டராம்பட்டு அருகே மலமஞ்சனூர் கிராமத்தில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு: காவல் துறையினர் விசாரணை

தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் கிராமத்தில் சித்தபடையார் கோயில் திருவிழாவில் திருடப்பட்டதாக கூறப்படும் சுவாமி சிலைகளை வைத்து வழிபாடு நடைபெற்றுள்ளது. (கோப்புப்படம்)

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே மல மஞ்சனூர் கிராமத்தில் மலை மீது உள்ள குகையில் வைக்கப் பட்டிருந்த சித்தபடையார் கோயிலுக்கு சொந்தமான 10 ஐம்பொன் சிலைகளை திருடி சென்றவர்களை காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் கிராமத்தில் பச்சையம்மன் கோயில் அருகே மலையடிவாரத்தில் சித்தபடையார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆனி பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.

2019-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றபோது, மலை மீது உள்ள குகையில் வைக்கப்பட்டுள்ள 10 ஐம்பொன் சுவாமி சிலைகளை எடுத்து வந்து சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. வழிபாட்டுக்குப் பிறகு, குகையில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், 2022-ம்ஆண்டு ஆனி பவுர்ணமி நாளில், திருவிழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி, மலை மீது உள்ள குகையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகளை எடுக்க, அதே கிராமத்தில் வசிக்கும் நிர்வாகி ஆலடியான் சென்றுள்ளார்.

அப்போது குகையில் இருந்த 5 கிலோ எடை உள்ள ஒரு ஈஸ்வரர் சிலை, தலா 5 கிலோ எடை உள்ள ஈஸ்வரர், ஈஸ்வரி இணைந் ததுபோல் 2 ஜோடி சிலைகள், தலா 3 கிலோ எடை உள்ள 4 வீர பத்திரன் சிலை, ஒன்றேகால் எடை உள்ள ஒரு வீரபத்திரன் சிலை, விநாயகர் சிலை என மொத்தம் 10 ஐம்பொன் சுவாமி சிலைகளையும் காணவில்லை. இவை அனைத்தும் சுமார் ஒரு அடியை கொண்டது.

இது குறித்து நிர்வாகி ஆலடி யான் கொடுத்த புகாரின் பேரில் தானிப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “மலை மீது உள்ள குகையில் வைக்கப்பட்டிருந்த 10 ஐம்பொன் சிலைகள், எப்போது திருடப்பட்டன என தெரியவில்லை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுவாமி சிலைகளை வெளியே எடுத்து வந்து விழா நடத்துவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். சுவாமி சிலைகளை திருடியவரை கண்டறிந்து, சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x