ஈரோடு பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை

ஈரோடு பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

ஈரோடு பெண் இன்ஸ்பெக்டர் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ அடிப்படையில் ஈரோடு சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் விஜயா. இவர் மீது ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த ஆல்வின் பிலிப் என்பவர், பல்வேறு புகார்களைக் கூறி சமூக வலைதளங்களில் ஆடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார். மேலும், அப்பதிவுகளை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அப்பதிவுகளில், ‘இன்ஸ்பெக்டர் விஜயா, குட்கா வியாபாரி அக்ளி என்பவரிடம் பணம் பெற்று அவரை விடுவித்ததாகவும், எஸ்பி பெயரைப் பயன்படுத்தி பலரிடமும் லஞ்சம் பெற்றதாகவும்’ தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ பதிவு காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈரோடு சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ஜானகிராமன் முன்னிலையில், ஆல்வின் பிலிப் நேற்று முன்தினம் ஆஜராகி தனது பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ஜானகிராமன் கூறியதாவது:

ஆல்வின் பிலிப் என்பவர் என்னை சந்தித்து இன்ஸ்பெக்டர் விஜயா குறித்து சில தகவல்களைத் தெரிவித்தார். அவர் என்னிடம் ஆதாரம் எதுவும் தரவில்லை. மீண்டும் நாளை வருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் உரிய ஆதாரங்களைக் கொடுத்தால், அடுத்த கட்டமாக இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்படும். மேலும், ‘ஆல்வின் பிலிப் தன் மீது அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக’ இன்ஸ்பெக்டர் விஜயா, எஸ்பியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், ஆல்வின் பிலிப் இதுவரை புகார் அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in