

சென்னை: சென்னை பாரிமுனை ரத்தன் பஜார் பகுதியில் பொம்மைகளை விற்கும் கடை நடத்தி வருகிறார் மூசா (62). அருகில், முகேஷ் என்பவரது துணிக்கடை உள்ளது.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு இவர்களது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, மூசாவின் கடையிலிருந்து ரூ.1.40 லட்சம், முகேஷின் கடையிலிருந்து ரூ.5லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பூக்கடை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், காரில் வந்த ஒருவர்கடைகளின் பூட்டை உடைத்து, பணத்தை திருடியது தெரியவந்தது. காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரித்ததில், பெங்களூரு ஆணைக்கல் அருகேயுள்ள சி.கே.பாளையத்தைச் சேர்ந்த ஆனந்த்(34) என்பவர் இத்திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய கார், பூட்டு உடைக்கப் பயன்படும் இரும்பு பொருட்கள், கையுறைகள், முகமூடிகளைப் பறிமுதல் செய்தனர்.