

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள பாரதி அரசு மகளிர்கலைக் கல்லூரியில் பழைய நூற்றாண்டு விழாக் கட்டிடம் உள்ளது. கரோனா காலகட்டத்தில் இந்தக் கட்டிடம் மூடப்பட்டிருந்தது.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அந்தக் கட்டிடத்தில் இருந்த 50 மின் விசிறிகள், எல்இடி புராஜெக்டர், 2 ஆயிரம் புத்தகங்கள், 3 மின்மோட்டார்கள், இரும்புப் பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸார் விசாரித்தனர்.
இதில், அந்தப் பகுதியில் உள்ளஒரு பழைய புத்தகக் கடையில், கல்லூரியின் சீலிடப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், வீரமணி, தீபன், வெங்கடேசன், பாபு, சூரி ஆகியோர் இந்த திருட்டில்ஈடுபட்டு, பழைய விலைக்கு புத்தகங்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் அந்த 6 பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும், பள்ளியில் இருந்து திருடிய புத்தகங்களை விலைக்கு வாங்கியதாக ராமநாதன், பாஸ்கர் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.