

புதுடெல்லி: வியட்நாமில் இருந்து 45 கைத்துப்பாக்கிகளுடன் டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய இந்திய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் பணியில் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை ஈடுபட்டிருந்தனர். இதில் 2 ட்ராலி பேக்குகளில் 45 கைத்துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். வியட்நாமில் இருந்து டெல்லி வந்த இந்தியத் தம்பதியர் இவற்றை கடத்தி வந்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.22 லட்சமாகும். இதையடுத்து இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “துப்பாக்கிகள் உண்மையானவையா இல்லையா என்பதை ஆயுத அறிக்கை உறுதிப்படுத்தும். என்றாலும் தேசிய பாதுகாப்பு படையான என்எஸ்ஜி தனது முதற்கட்ட அறிக்கையில் இந்த துப்பாக்கிகள் முழுமையாக செயல்படக் கூடியவை எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முன் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 25 கைத்துப்பாக்கிகளை கடத்தி வந்துள்ளதாக இத்தம்பதியர் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.
வியட்நாமில் இருந்து பரிசோதனைகளை கடந்து அவர்கள் எவ்வாறு துப்பாக்கிகளை கடத்தி வந்தனர் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.