

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மயிலாப்பூர் துணை ஆணையர் மற்றும் சேலம் மாவட்ட எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராக விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல்வர் பாதுகாப்பு பணிக்குச் சென்றபோது, தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து அந்த சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார், விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அரசு தரப்பு சாட்சிகளான பெண் எஸ்பியின் கணவர் (ஐஏஎஸ் அதிகாரி), அவரின் தந்தை உள்ளிட்டோர் ஆஜராகினர். நீதித்துறை நடுவர் புஷ்பராணி, அரசு தரப்பு சாட்சியங்களை பதிவு செய்தார்.
பின்னர் விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் அரசுதரப்பு சாட்சிகளான தற்போதைய மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், சேலம் எஸ்பி அபினவ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டார்.