Published : 13 Jul 2022 07:30 AM
Last Updated : 13 Jul 2022 07:30 AM

தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

தென்காசி: ஆலங்குளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்தில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், குடும்பத்துடன் ஆலங்குளத்தில் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டிட வேலை பார்த்து வந்தார். ஆலங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ், அவரது சகோதரர்கள் செல்வராஜ், ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செங்கல், ஆற்று மணல் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் தொழில்ரீதியாக இவர்களுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு சுரேஷ்மற்றும் அவரது சகோதரர்களை கருப்பசாமி அவதூறாக பேசிஉள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சுரேஷின் மணல் லாரியை போலீஸார் மறித்து விசாரித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸில் கருப்பசாமிதான் தகவல் கூறி, தங்கள் லாரி போலீஸிடம் பிடிபட வைத்திருப்பார் என்று சுரேஷ் தரப்பினர் கருதினர். இதனால், கருப்பசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

கடந்த 12.9.2012 அன்று இரவு ஆலங்குளம் - புதுப்பட்டி சாலையில் கருப்பசாமி, தனது சகோதரர் முத்துக்குமாருடன் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு, சுரேஷ், அவரது சகோதரர்கள் ராஜா, செல்வராஜ், ஆலங்குளத்தைச் சேர்ந்த உறவினர் முத்துராஜ், நண்பர்கள் அருள்பெருமாள், முருகன், ராஜ், வைத்திலிங்கம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் அரிவாள்களுடன் பதுங்கிஇருந்தனர்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து கருப்பசாமியை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதைப்பார்த்த முத்துக்குமார் தடுக்க முயன்றுள்ளார். அவரை கொன்றுவிடுவதாக மிரட்டிய கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த கருப்பசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுரேஷ் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 9 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 17 வயது சிறுவன் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மற்ற 8 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நடைபெறும்போதே, குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான முத்துராஜ் இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம் சுமத்தப்பட்ட சுரேஷ், அவரது சகோதரர்கள் உட்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x