

சென்னை: 24 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திராவைச் சேர்ந்தவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவை சேர்ந்த பூர்ண சந்திர பங்கி என்பவரிடமிருந்து 24 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பூர்ண சந்திர பங்கி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழ் தெரியாத தனக்கு உரிய முறையில் வழக்கு ஆவணங்கள் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. தனது ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்ததாக கூறுவதை மொழிபெயர்த்தவர் யார் என்பது குறித்த தகவலையும் குறிப்பிடவில்லை. மேலும், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னேற்றம் இல்லாததால், ஜாமீன் கிடைக்காமல் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, "விசாரணை முடிந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தான் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைமுறைகள் விசாரணை நீதிமன்றத்தில் நிறைவடையவில்லை. இரண்டு மாதத்தில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்குப் பதிவு மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றில் குறைபாடுகள் உள்ளதாக மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றத்தில்தான் முன்வைக்க வேண்டும். ஜாமீன் கோரிய பூர்ண சந்திர பங்கியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டுமென சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.