

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். காவல்துறை அதிகாரி களிடம் அவர்கள் அளித்த புகாரில், ‘‘கோவை மருதமலை சாலையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் இயங்கி வந்தது.
இந்நிறுவனத்தின் சார்பில், சிங்கப்பூரில் மாதம் ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலைஇருப்பதாகவும், சிவில் இன்ஜினியர், சூப்பர் வைசர், பிட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விசா பெறுதல், பயணக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்த னர். இதை நம்பி, 150-க்கும் மேற்பட் டோர் வேலைக்கு தகுந்தவாறு ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் பணம் செலுத்தினர். பின்னர், அந்நிறுவனத்தின் சார்பில், எங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை தயாராகி விட்டது என குறுந்தகவல் அனுப்பினர்.
இதுதொடர்பாக நாங்கள் நிறுவனத்தை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
நேரில் சென்று பார்த்த போது, அலுவலகம் மூடப்பட்டிருந்தது. பின்னர்தான், அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் எங்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலித்துவிட்டு, போலியாக குறுந்தகவல் அனுப்பிவிட்டு, நிறுவனத்தை மூடி தலைமறைவானது தெரியவந்தது.
ஏறத்தாழ 180-க்கும் மேற் பட்டோர் இந்நிறுவனத்திடம் பணத்தை அளித்துள்ளோம். லட்சக்கணக்கில் எங்களிடம் பணத்தை வசூலித்துவிட்டு மோசடி செய்த அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள், ஊழியர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்ற னர்.