

சென்னை: சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (69). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் நேற்று காலை, எழும்பூர் ரயில் நிலையம், தெற்கு வாசல் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த 2 பேர் ரவிச்சந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனைப் பறிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து ரவிச்சந்திரன், எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாக சம்பவ இடத்தருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியைச் சேர்ந்த சாய்குமார் (24), அவரது கூட்டாளி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவர் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 47 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் சாய்குமார் மற்றும் சிறுவர்கள் சென்னை, அம்பத்தூரில் தங்கியிருப்பதும், அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. சாய்குமார் நீதிமன்றத்திலும், பிடிபட்ட இளஞ்சிறார், சிறுவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.