

ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த மருத்துவக்கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி சண்முகிசவுத்ரி(22). இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். அதேபோல, ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த நித்தின்(22), கேரளாவைச் சேர்ந்த சுப்ரீத் (20), ரிஷாந்த்அகமது(20), அந்தமான் நிக்கோபார் தீவைச் சேர்ந்த சுஜான் (19), ஆலினா(18) ஆகியோரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதன்படி, ஒரு காரில் மாணவ, மாணவிகள் 6 பேர் சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவுக்கு சென்றனர். மாணவர் ரிஷாந்த்அகமது காரை ஓட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில், மாணவி சண்முகிசவுத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்த 5 மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணவி சண்முகிசவுத்ரி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.