

பாணாவரம் அருகே கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ரவுடியின் உடலை காவல் துறையினர் நேற்று மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் சரத்குமார்(22). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானப் பகுதி யின் அருகே கை, கால்கள் துண்டு, துண்டாக வெட்டபட்ட நிலையில் அசோக்குமார். கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன், ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் பாணாவரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, பாணாவரம் காவல் துறையினர் சரத்குமார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறை யினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற் கட்ட விசாரணையில், கூத்தபாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சரத்குமாரை நேற்று முன்தினம் பிற்பகல் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் எனக்கூறி விசாரணைக்காக திருவள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாக கூறி ஒரு கும்பல் அவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
எனவே, அந்த கும்பல்தான் சரத்குமாரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சரத்குமாரை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.