

கிருஷ்ணகிரி: சிறிய அளவில் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும் எனக்கூறி பர்கூர் ஜவுளிக்கடை பெண் உரிமையாளரிடம் ரூ.4.37 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், ஜெகதேவி சாலை பகுதியில் வசிக்கும் 28 வயது பெண், பர்கூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி, அப்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த அளவில் பண முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் வருவாய் கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.6 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, ஒரு இணையதள முகவரி லிங்க்கையும் அனுப்பி வைத்திருந்தனர்.
இதனை நம்பிய அப்பெண், முதல் சிறிதளவு பணத்தை முதலீடு செய்தார். அதற்கு லாபத்துடன் பணம் கிடைத்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து, இணையதளம் முதலீடு செய்து வந்தார்.
ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்து 879 முதலீடு செய்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு குறிப்பட்ட அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால் அப்பெண்ணால் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து தான் நூதன முறையில் ஏமாற்றப்பபட்டதை உணர்ந்தவர், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.