

சிவகங்கை: மானாமதுரை அருகே கடந்த மாதம் சுகாதாரத் துறை வாகனத்தில் பட்டுக்கோட்டைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 1,200 போலி மதுபாட்டில்களை போலீஸார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், சிவகங்கை அருகே சிவலிங்கபுரம் பகுதியில் போலி மதுபான ஆலை செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸார் நேற்று சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(42) என்பவரது தோட்டத்தில் சோதனை நடத்தினர்.
2 ஆயிரம் காலி பாட்டில்கள்
அங்கு போலி மது ஆலை செயல்பட்டது தெரியவந்தது. 2 கேன்களில் இருந்த 70 லிட்டர் ஸ்பிரிட், 2,000 காலி மதுபாட்டில்கள், பிரபல மதுபான நிறுவனத்தின் பெயரிலான 20,000 ஸ்டிக்கர்கள், 22 எசன்ஸ் பாட்டில்கள், 5,000 மூடிகள், இயந்திரங்களை கைப்பற்றினர். இதையடுத்து ஆலைக்கு சீல் வைத்த போலீஸார், ராம்குமார் (எ) ரெட்டி, மாரிமுத்து, தோட்ட உரிமையாளர் ராஜேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.