Published : 06 Jul 2022 07:51 AM
Last Updated : 06 Jul 2022 07:51 AM

திருநெல்வேலி | பள்ளிக்குள் மாணவர் கொலை சம்பவம்; இளஞ்சிறார் மீதான வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம்: தமிழகத்தில் முதன்முறையாக அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி: தமிழகத்தில் முதன்முறையாக கொடூர குற்றச்செயலில் ஈடுபட்ட இளஞ்சிறார் மீதான வழக்கு, திருநெல்வேலி இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இளஞ்சிறார்கள் நீதிபரிபாலன சட்டத்தின்படி (JJ Act), 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கொடூரக் குற்றங்களில் (Heinous Offence) ஈடுபட்டு இருந்தால், அவர்கள் மீதான வழக்கு விசாரணை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் (Juvenile Justice Board) நடைபெற்று வந்தது. இந்த நீதிக் குழுமத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையே தண்டனை விதிக்கப்படும் நிலையுள்ளது.

அதிகபட்ச தண்டனை

சமீபத்தில் வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி 16 வயது நிறைவடைந்த இளஞ்சிறார்கள் கொடூர குற்றங்களில் ஈடுபடும்போது அவர்களை முழுமையான பருவம் அடைந்தவர்கள் (adult) எனக்கருதி, அந்த குற்றத்துக்கான விசாரணை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, வழக்கமான குற்ற நடைமுறை விசாரணை நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க இயலும்.

அந்தவகையில் சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் நிகழ்ந்த ஜாதி மோதல் சம்பவத்தில், ஒரு மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 இளஞ்சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் 16 வயது பூர்த்தியானவர் என்பதால், அவரை பருவம் அடைந்தவராக கருதி, தமிழகத்திலேயே முதன்முறையாக, அவர் மீதான விசாரணையை, இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x