

கோவை: கோவை தடாகம் சாலை பசுவண்ணன் கோயில் இறக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(37), நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கடைக்கு காய்கறி வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர், ரமேஷை மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
பொதுமக்கள் அவர்களைப் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் மகோடா(36), சந்தோஷ் மகோடா(33), பப்லு மகோடா(23), பிஹாரைச் சேர்ந்த மனிஷ் மகோலி(22) ஆகியோர் எனத் தெரியவந்தது.
இவர்களுடன் பிஹாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 10 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் சேர்ந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸார் கூறும்போது,‘‘7 பேரும் அடிக்கடி கோவைக்கு வருவர். இங்கு கொள்ளையடித்துச் செல்லும்போது ஒருவர் விமானத்திலும் மற்றவர்கள் ரயிலிலும் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்’’ என்றனர்.