

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செவ்வாப்பேட்டை, பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை ஒழிக்கவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கொலை, கொள்ளை, சைபர் குற்றங்கள், கட்டப் பஞ்சாயத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற பிஸ்டல் பாபு, வினோத்குமார், அப்பு என்கிற பூவராகவன், மாணிக்கம், பிராங்க்ளின், யுவராஜ் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த ஜெபா என்கிற ஜெபகுமார், மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த பிரபு, சோழவரம் செக்கஞ்சேரியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்கிற விக்கி, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த மணிகண்டன், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 12 பேர், ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கடந்த ஜனவரி 1 முதல், ஜூலை 4 வரை, 74 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 21 பேர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். 4 பேர் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள்.