Published : 05 Jul 2022 04:07 AM
Last Updated : 05 Jul 2022 04:07 AM
குணா (ம.பி.): மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் வசிப்பவர் ராம்பிரியா பாய் (38). இவரது கணவர் அர்ஜுன் சகாரியா. இவர்கள் சகாரியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பமோரி பகுதியில் உள்ள தனோரியா கிராமத்தில் அரசு ஒதுக்கிய மூன்றே முக்கால் ஏக்கரில் நிலம் உள்ளது.
அந்த நிலத்தை ஆக்கிரமிக்க கிராமத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை தனோரியா கிராமத்தில் உள்ள நிலத்தை சிலர் உழுது கொண்டிருந்தனர். அங்கு சென்ற ராம்பிரியா அந்த நிலம் தன்னுடையது என்று கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராம்பிரியா மீது டீசல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி வைரலானது.
இதுகுறித்து ராம்பிரியாவின் கணவர் அர்ஜுன் கூறும்போது, ‘‘எங்களுடைய நிலத்துக்கு வந்த போது கிராமத்தைச் சேர்ந்த பிரதாப், ஹனுமந்த், ஷியாம் கிரார் ஆகியோர் அவர்களுடைய குடும்பத்தினருடன் தப்பியோடுவதைப் பார்த்தேன்.
நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதும் போலீஸில் புகார் அளித்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது சிலர் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து என் மனைவியை எரித்துள்ளனர். இதற்கு முன்பு கூட அவர்கள் என் மீதும் தாக்குதல் நடத்தினர்’’ என்றார்.
போபால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள ராம்பிரியா கூறும்போது, ‘‘கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட6 பேர் என் மீது டீசல் ஊற்றி தீ வைத்தனர்’’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT