கருமுட்டை விற்பனை செய்த விவகாரம்: சிறையில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேரிடம் மருத்துவக் குழு விசாரணை
சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாய், வளர்ப்பு தந்தை உள்ளிட்டோரிடம் உயர்மட்ட மருத்துவக் குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி, போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாய், இடைத்தரகர் மாலதி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும், ஜான், ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் உள்ள 4 பேரிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரி மருத்துவக் குழு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மருத்துவர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோட்டுக்கு வந்தனர்.
தொடர்ந்து நேற்று காலை விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முதலில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, போலி ஆவணம் தயாரித்து கொடுத்த ஜானிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய், இடைத்தரகர் மாலதியிடம் மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர். மருத்துவக் குழுவினர் விசாரணையால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
