Published : 05 Jul 2022 04:15 AM
Last Updated : 05 Jul 2022 04:15 AM

மதுரை அரசரடி மின்வாரிய ஊழியர் கொலை: விபத்துபோல் நாடகமாடிய மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மின்வாரிய ஊழியரைக் கொலை செய்துவிட்டு விபத்துபோல் நாடகமாடிய அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சுழி அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (45). கடந்த ஆண்டு மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி இரவு திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுக்கள் திருச்சுழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

முத்துராமலிங்கத்தின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது பெரியப்பா மகன் முருகன் என்பவர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில், முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா (43), கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி என்பதும், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தை அன்னபூரணியுடன் முத்துராமலிங்கத்துடன் வந்து விட்டதும், இருவரும் திருச்சுழி பகுதியில் குடியிருந்து பின்பு அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் புதிதாக வீடு கட்டி குடியிருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

மின்வாரியத்தில் பணி கிடைக்கும் முன் முத்துராமலிங்கம் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். அங்கு பள்ளிமடத்தைச் சேர்ந்த மலையரசன் (22) என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கும் சுனிதாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது முத்துராமலிங்கத்துக்குத் தெரிந்ததால் மனைவி சுனிதாவை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுனிதா செல்போனில் மலையரசனை தொடர்புகொண்டு தனது கணவரை கொலை செய்து சடலத்தை விபத்து நடந்ததுபோல் போட்டுவிட்டு வருமாறு கூறியதாகத் தெரிகிறது.

அதையடுத்து, மலையரசனும் அவரது நண்பர் சிவா (23) என்பவரும் சேர்ந்து வீட்டுக்கு வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை கொலை செய்து, அவரது சடலத்தை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று 3 கி.மீ. தொலைவில் நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே தூக்கி எறிந்துவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, இவ்வழக்கை போலீஸார் கொலை வழக்காக மாற்றி சுனிதா, மலையரசன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x