திண்டிவனத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல்: தனியார் நிதி நிறுவனத்தில் போலீஸார் சோதனை

திண்டிவனத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல்: தனியார் நிதி நிறுவனத்தில் போலீஸார் சோதனை
Updated on
1 min read

திண்டிவனத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.

திண்டிவனம் அருகே உள்ள கிராண்டிபுரத்தைச் சேர்ந்தவர் கவிதாசன்(31). மாட்டுப்பண்ணை தொழில் செய்து வருகிறார். இவர், திண்டிவனம் திருவள்ளுவர் நகரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் ரவி என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கினார்.

மாத வட்டியாக ரூ.42 ஆயிரம் செலுத்தி வந்தார். ரூ.6 லட்சம் செலுத்திய நிலையில், அசலும் வட்டியுமாக ரூ.10 லட்சம் கேட்டு ரவி மிரட்டல் விடுத்ததாக, கவிதாசன் வெள்ளிமேடுபேட்டை போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ரவிக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர் . ஆனால் ரவி தலைமறைவானார். அவரது நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்த திண்டிவனம் 1-வது குற்றவியல் நடுவர்மன்றத்தில் போலீஸார் அனுமதி கேட்டனர்.

இதை ஏற்று நீதிமன்ற நடுவர் மாலதி உத்தரவிட்டார். இதன் பேரில், ரவியின் நிதி நிறுவனத்தின் அலுவலகத்தில் பூட்டை திறந்து ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். பின்னர் போலீஸார் அந்த அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

இந்த சோதனையில் கையெழுத்துடன் உள்ள ஏராளமான வெற்றுபத்திரங்கள், கையெழுத்துடன் உள்ள வெற்று பிராமிசரி நோட்டுகள் மற்றும் காசோலைகள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர். இதனால், ரவி மேலும் பலரிடம் கந்து வட்டி வசூல் செய்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in