

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் மகன் ஸ்டீபன்(11). எச்ஏபிபி தொழிற்சாலையில் உள்ள பரமஹம்ச பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை பெரிய சூரியூரிலிருந்து துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தார். காந்தலூர் பிரிவுச் சாலை அருகே சென்றபோது அங்கிருந்த வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியது. அப்போது பேருந்தில் இருந்த ஜன்னல் கண்ணாடி கழன்று மாணவர் ஸ்டீபன் கையில் விழுந்தது. இதில் அவரது வலது கையின் ஆள்காட்டி விரல் துண்டானது.
இதையடுத்து படுகாயமடைந்த மாணவர் ஸ்டீபன் எச்ஏபிபி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு விரலில் தையல் போடப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
இது குறித்து மாணவனின் உறவினரான வினோத் அளித்த புகாரின் பேரில், நவல்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.