

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு, 140 பவுன் நகைகள், ரூ.10 லட்சம்ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிதம்பரநாடார் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் (88). இவரது மனைவி ஜாய்சொர்ணதேவி (83). இவர்கள் இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். இருவரும் தங்கள் மூத்த மகள் ராணியின் பராமரிப்பில் வசிக்கின்றனர். இவர்கள் மூவர் மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர்.
வள்ளியூரில் பொதுப்பணித் துறையில் ராணி வேலை பார்க்கிறார். தினமும் காலை வள்ளியூர் செல்லும் ராணி, வேலை முடிந்து இரவு 8 மணிக்குதான் வீடு திரும்புவார்.
நேற்று முன்தினம் அலுவலகத்தில் நடந்த பிரிவுபசார விழாவில் பங்கேற்ற பின், இரவு 10 மணிக்குதான் ராணிவீட்டுக்கு வந்தார். வீட்டு கதவுதிறந்து கிடந்துள்ளது. வீட்டுக்குள் அருணாசலமும், ஜாய் சொர்ணதேவியும் வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில், நாற்காலியோடு சேர்த்து கயிறால் கட்டப்பட்டு இருந்தனர். அதிர்ச்சியடைந்த ராணி கட்டை அவிழ்த்து விசாரித்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் அருணாசலம் வீட்டுக்குள் இருந்துள்ளார். ஜாய் சொர்ணதேவி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது, மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
அவர்கள், ஜாய் சொர்ணதேவி, அருணாசலம் ஆகியோரை கையால் தாக்கி, வாய்க்குள் துணியைத் திணித்து, இருக்கையில் அமர வைத்து கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், பீரோவைத் திறந்து அதில் இருந்த 140 பவுன் நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸாருக்கு ராணி தகவல் தெரிவித்தார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் நேரில் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.