

உடுமலை: உடுமலை ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்த அஸ்வின் பிரசாத்- வளர்மதி தம்பதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார்-கவிதா தம்பதிக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்தது.
இதில், அஸ்வின் பிரசாத்துக்கு ஆதரவாக இந்து முன்னணி பிரமுகர் குமரவேல் செயல்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 22-ம் தேதி ரஞ்சித்குமாருடன் சேர்ந்து சிலர், குமரவேலை வெட்டிக்கொலை செய்தனர். அஸ்வின் பிரசாத் காயங்களுடன் உயிர் தப்பினார்.
புகாரின்பேரில், நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த ஆத்தியப்பன், கோவை மாவட்டம் ஆதிபாளையத்தைச் சேர்ந்த செந்தில், குமரி மாவட்டம் கோவளம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன், நெல்லை மாவட்டம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ரஞ்சித்குமார், கவிதா உட்பட பலரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகன் ஆனந்தகுமார் (37), வேலம்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் ஹரிஷாந்த் (21), தஞ்சாவூர் மாவட்டம் சேதுராம்பட்டியைச் சேர்ந்த தமிழ் செல்வம் என்பவரது மகன் செல்வம் (23) ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.