

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் முருகன்(33). இவர், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் மகளான 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர், கடந்த மாதம் 23-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், தனது வீட்டின் பின் பகுதியில் உள்ள தைலமரம் தோப்புக்கு முருகன் நேற்று முன் தினம் சென்றுள்ளார். அப்போது அவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இது குறித்து தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ததால், அவரது குடும் பத்தினர் கொலை செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து தணிகைவேல்(45), அவரது மனைவி தேவிகா(38), மகன்கள் சுரேஷ்(21), விக்னேஷ்(19) மற்றும் உறவினர் வேல்முருகன்(26) ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓட்டுநரின் உறவினர்கள் மறியல்
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட வர்களை சிறையில் அடைக்க வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும், இல்லையென்றால் முருகனின் உடலை பெற மாட்டோம் என கூறி அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பாண்டியம்பாக்கம் கூட்டுச்சாலையில் (காஞ்சிபுரம் - செய்யாறு நெடுஞ்சாலை) நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது முருகனின் உறவினர் ஒருவர், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது செயலை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், “கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்படுவார்கள், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும்” என உறுதி அளித்தனர்.
அதன்பேரில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.