

புதுச்சேரி: மூதாட்டியை கொன்று நகைகளை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களி டம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி சேதராப்பட்டு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் உண்ணாமலை. இவர் கடந்த 24-ம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது நகைகள் திருடப்பட்டிருந்தன. இந்த வழக்கை சேதராப்பட்டு போலீஸார் விசாரித்தனர். எஸ்எஸ்பி தீபிகா உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்ந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக வானூர் அடுத்த தி.கூட்ரோட்டைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஸ்டீபன் (39), லாஸ்பேட்டையைச் சேர்ந்த பால பவித்ரன் (26) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி திருடப்பட்ட 108.9 கிராம் தங்க நகைகள் (சுமார் ரூ.10 லட்சம்) மீட்கப்பட்டன.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீபன், சேதராப்பட்டில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளர்களை வேலைக்கு வைக்கும் ஊழியர்களுக்கான கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். காண்ட்ராக்டில் வேலை செய்யும் நபர்களை மூதாட்டி வீட்டில் தங்க வைத்து வாடகை கொடுத்துள்ளார்.
மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து, அவரது நகைகளுக்காக இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பால பவித்ரன்உதவியுடன் உள்ளே நுழைந்து மூதாட்டியின்கழுத்தை நெறித்து நகைகளை கொள்ளையடித் துள்ளனர். கைதான பால பவித்ரன் உதவி சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஆவார்” எனத் தெரிவித்தனர்.
எஸ்எஸ்பி தீபிகா கூறுகையில், “வீட்டில் தனியாக உள்ள முதியோர், தங்கள் விவரங்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிப்பது பாதுகாப்பு அளிக்க உதவும்” என்று குறிப்பிட்டார்.