Published : 01 Jul 2022 06:10 AM
Last Updated : 01 Jul 2022 06:10 AM

புதுச்சேரி | சொத்து தகராறில் வளர்ப்பு பெற்றோரை எரித்துக் கொன்ற மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள்

புதுச்சேரி: சொத்து தகராறில் வளர்ப்பு பெற்றோரை எரித்து கொன்ற மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை புதுச்சேரி நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது.

புதுச்சேரி மேட்டுபாளையம் தருமாபுரி அகத்தியர் கோட்டத்தைச் சேர்ந்த தம்பதி நாராயணசாமி (74) - வசந்தா (62). இவர்களில் நாராயணசாமி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால் நாராயணசாமி தனது தங்கை மகள் ஆனந்தியை (37) தத்தெடுத்தார். அதன் பின்னர் நாராயணசாமி - வசந்தா தம்பதியுடன் ஆனந்தி, அவரது கணவர் முருகவேல் (39)ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் வசித்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தர வளர்ப்பு மகள் ஆனந்தி கோரினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இப்பிரச்சினை புதுச்சேரி மேட்டுபாளையம் காவல்நிலையம் வரை சென்று சமரசம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2012-ல் நாராயணசாமி-வசந்தா தம்பதி தங்கள் வீட்டில் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தனது வளர்ப்பு பெற்றோரை ஆனந்தி, அவரது கணவர் முருகவேலுடன் இணைந்து கொலை செய்து, சடலங்களுக்கு தீ வைத்தது தெரிந்தது. இச்சம்பவத்தில் இவர்களுடன் ஆனந்தியின் மாமனார் ரத்தினம், அடைக்கலம் தந்த குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு விசாரணையானது புதுச்சேரி மூன்றாவது மாவட்ட கூடுதல் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தி, முருகவேலின் குற்றம் உறுதி செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த ரத்தினம், குமார் விடுதலை செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x